Saturday, October 13, 2012

Sri Lalitha Sahasranamam - Bhaskara raya mahi - Mahaperiyava

பாஸ்கரராய மஹி என்பவர் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு 'சௌபாக்ய பாஸ்கரம்' என்னும் தலைப்பில் உரை எழுதியிருக்கிறார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியிருப்பதாக ரொம்பப் பேர் நினைப்பார்கள்.
ஏதாவது விசேஷமான நூலாக இருந்தால் அது சங்கரர் இயற்றியது என்று நினைத்துவிடுவது வழக்கம். அந்தக் காலத்திலேயே பல நூல்களின் அடியில் 'சங்கராச்சார்ய விரசித' என்று போட்டுப் பிரகடனப்படுத்திக்கொள்வார்கள்.

இதில் எத்தனை நூல்கள் - எந்தெந்த நூல்கள் உண்மையிலேயே ஆதிசங்கரரால் இயற்றப்பட்டவை என்பதை யாரும் ஆராயவில்லை.

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் ஆதிசங்கரர் பெயரால் உலவும் நூல்களுக்கும் யாராவது ஒரு வடிகட்டல் செய்தார்களானால் ரொம்பவும் நல்லது.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு ஆதிசங்கரர் உரையெழுதமுயன்றும் அவரால் எழுதமுடியவில்லை.

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு உரையெழுத ஒருநாள் ஆதிசங்கரர் நினைத்தார். அவருடைய மடத்தில் நூல் நிலையம் ஒன்று இருந்தது. அதை 'ஸரஸ்வதி பண்டாரம்' என்று குறிப்பிடுவார்கள். ஆயிரக்கணக்கில் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஸரஸ்வதி பண்டாரம் என்பதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன். 
அவருடை சீடர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் சுவடியைக் கொண்டு வரச ்சொன்னார்.
அவரும் நூல் அறைக்குள் சென்று ஒரு சுவடியைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து ஆதிசங்கரரிடம் கொடுத்தார். 
அதைப் பிரித்துப் பார்த்தார் சங்கரர். ஆனால் அது 'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' ஏடு. சீடரிடம் அதைத் திருப்பிக் கொடுத்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வரச் சொன்னார்.
சீடர் நூலறைக்குச் சென்று, மீண்டும் ஒரு சுவடியைக் கொணர்ந்தார். 
அதுவும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்தான். 
மீண்டும் ஒழுங்காகக் கொண்டுவரச் சொல்லி சங்கரர் சீடரைத் திருப்பி அனுப்பினார்.
மீண்டும் வந்தது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்தான்.
சீடரிடம் காரணம் கேட்டார்.
"நான் என்ன செய்வது? அறையில் இருந்து ஒழுங்காகத்தான் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம சுவடியை எடுக்கிறேன். ஆனால் அந்த அறைக்குள் ஒரு பெண் நின்றுகொண்டு, என்னைத் தடுத்து, கையில் இருக்கும் சுவடியை வாங்கிக ்கொண்டு, "இதைக் கொண்டுபோய்க் கொடு", என்று சொல்லி, இதையே கொடுத்து அனுப்புகிறாள். அவளை ஏதும் மறுத்துக் கேட்பதற்குத் தோன்றவில்லை. இவ்வாறு மூன்று தடவை நடந்துவிட்டது", என்றார் சீடர்.
உள்ளே இருப்பவள் அம்பிகைதான் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஆதிசங்கரர் உடனடியாக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யத்தை எழுதினார்.

பின்னால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாஸ்கரராயமகியே ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதினார்.

அவர் ஒரு மாபெரும் உபாசகர், மேதை, மிகப் பெரும் கல்விமான். பல கலைகளையும் ஆழமாக அறிந்தவர். வேத, ஆகம, தந்திர சாஸ்திரங்களிலும் இதிகாசங்கள், புராணங்கள், யோகம், சித்தாந்தம், வேதாந்தம், தர்க்கம், மந்திர சாஸ்திரங்கள் போன்ற அனைத்திலும் துறைபோகியவர்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். மஹாராஷ்டிரர்.
பல ரகசிய நூல்கள், கோட்பாடுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், ரகசிய சமயங்கள் போன்றவற்றை நன்கு அறிந்தவர்.
அம்பிகை உபாசனையில் பல கட்டங்களைத் தாண்டியவர்.
பல அபூர்வ ஆற்றல்கள் படைத்தவர்.
அவருடைய வரலாற்றை இன்னொரு கட்டுரையில் காணலாம்.
சிறுவயதாக இருக்கும்போதே பெரிய அறிஞராகிய அவருடைய தந்தையார் பாஸ்கரராயரைக் காசிக்கு அனுப்பி, அங்கு இருந்த மிகப் பெரிய கல்விமான்களிடம் கல்வி கற்க வைத்தார். பல இடங்களில் அவர் நிகழ்த்திய வாதப்பிரதிவாதங்களைப் பற்றி கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னர் அவரைத் தம்மிடம் வரவழைத்துக் கொண்டார். காவிரிக்கரையில் பாஸ்கரராயபுரம் என்னும் கிராமத்தை ஏற்படுத்தி அவருக்குத் தானமாகக் கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டார். தமக்குத் தஞ்சை மன்னரால் கொடுப்பட்ட கிராமத்தில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். தாந்திரிக அமைப்புக் கொண்டது அந்தக் கோயில் என்பார்கள்.
வரிவஸ்யா ரஹஸ்யம், சேதுபந்தம், ஸௌபாக்ய பாஸ்கரம் ஆகிய அரிய நூல்களை இயற்றிவர். கணேச ஸஹஸ்ரநாமம்,
ஸ்ரீ£லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகியவற்றுக்கு உரையும் விளக்கமும் எழுதியவர்.
இவற்றில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு அவர் எழுதிய பாஷ்யமே 'சௌபாக்ய பாஸ்கரம்' என்ற பெயர் பெற்றது.
அந்த நாமாவளியில் உள்ள ஆயிரம் நாமங்களுக்கும் அவர் எழுதியுள்ள உரையைப் பத்து அத்தியாயங்களாக ஆக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூறு நாமாக்களின் உரை இருக்கும்.
இந்த உரை நூலை அவர் காசியில் ஒரு சபையைக் கூட்டி அங்கு அரங்கேற்றம் செய்தார்.
அந்த அரங்கத்தில் அவர் ஒவ்வொரு நாமத்தையும் சொல்லி அதற்குரிய பொருளையும் பொருள் விளக்கத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்,
கூடியிருந்த அறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமா வருகிறது.

'மஹாசதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கண ஸேவிதா' - அறுபத்துநான்கு கோடி யோகினி கணத்தாரால் சேவிக்கப்படுகிறவள்.
அதை விளக்கும்போது ஓர் அறிஞர் அவரைக் கேட்டார்:
"உண்மையிலேயே அறுபத்து நான்கு கோடி யோகினிகள் இருக்கின்றனரா?"
இருப்பதாக ராயரவர்கள் சொன்னார்.
"அப்படியானால் அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்"
"அப்படியே சொல்கிறேன். நான் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்."
பாஸ்கரராயர் வரிசையாக யோகினிகளின் பெயர்களைச் சொல்லலானார்.
அவர் சொல்லச் சொல்ல காசிப் பண்டிதர் எழுதிக் கொண்டே வந்தார்.
ஒரு நாள், இரண்டு நாள் ஆகியது.
மூன்றாவது நாள் அந்தப் பண்டிதருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பாஸ்கரராயரை நன்கு ஏறிட்டுப் பார்த்தார்.
அப்போது ஒரு காட்சி தென்பட்டது.
பாஸ்கரராயரின் தோளில் சிறிய உருவில் அமர்ந்து கொண்டு அம்பிகையே வரிசையாகத் தம்முடைய அறுபத்துநான்கு கோடி யோகினிகளின் பெயர்களையும் சொல்லிக ்கொண்டிருப்பதைக் கண்டார். அம்பிகை வேறு யார் கண்களுக்கும் தெரியவில்லை.
அவள் சொல்லிக்கொண்டிருந்த பெயர்கள் பாஸ்கர ராயருக்கு மட்டுமே கேட்டன. அவற்றை அப்படியே பாஸ்கரராயர் சொல்லிக்கொண்டிருந்தார். அதைத்தான் காசிப ்பண்டிதரும் எழுதிக்கொண்டே வந்திருக்கிறார்.
இதைக் கண்டவுடன் அந்தப் பண்டிதர் பாஸ்கரராயரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
அதன்பின்னர் அந்த அரங்கேற்றம் தடையில்லாமல் நடந்தேறியது.
அந்த அரிய உரையில் பல நுணுக்கமான விஷயங்களைப் பார்க்கலாம்.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாம மந்திரம் இருக்கிறது.

'சதுஷ்ஷஷ்டிகலாமயி'

'அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயாக விளங்குபவள்' என்று பொருள்.
இம்மந்திரத்திற்கு விளக்கம் கொடுக்கும் இடத்தில், பாஸ்கரராயர் அறுபத்துநான்கு கலைகளுக்கும் பட்டியலிட்டு, அவை என்னென்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வளவு விரிவானது அந்த உரை நூல்.
 
Custom Search