Friday, July 4, 2014

வழக்கொழிந்து போன 'ஒற்று'

வழக்கொழிந்து போன 'ஒற்று'
-------------------------------------------

தமிழில் எங்கு ஒற்று மிகும் எங்கு மிகாது என்பதற்கு 12 விதிகள் உள்ளன. ஆனால் இன்று ஊடகங்களில் , அது பத்திரிகைகள் ஆனாலும் சரி, தொலைக்காட்சி ஆனாலும் சரி, அல்லது facebook போன்ற வலைத்தளங்கள் ஆனாலும் சரி, எழுதப்படும் தமிழில் யாரும் இதைப்பற்றி கவலை கொள்வதில்லை. 

ர, ற ..ல, ள... ழ, ன, ண... இவற்றைக் கூட தப்புந்தவறுமாக எழுதுபவர்களை விட்டுவிடுவோம். நன்றாக தமிழ் தெரிந்து எழுதுபவர்கள் கூட இன்று ஒற்றுப்பிழையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கவலைப்படத் தேவையில்லை என்பதே என் வாதம். 'ஆடு' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இடத்தைப் பொருத்து அது விலங்கைக் குறிக்கிற பெயர்ச்சொல்லா அல்லது 'dance' என்கிற வினைச்சொல்லா என்று நாம் புரிந்து கொள்வதில்லையா?

அது போல வாழ்த்துக்கள் என்று தவறாக எழுதினால் அது வாழ்த்து என்கிற கள் என்று நாமும் ஏன் தவறாக புரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்து என்பதின் பன்மையான வாழ்த்துகள் என்று சரியாக புரிந்து கொள்ளலாமே.. அப்படித்தானே நடைமுறையில் புரிந்து கொள்கிறோம்?

நதி கரையினிலே.. என்று ஒரு படம்.. அதன் இயக்குனரிடம் மதன் கேட்டார்.. 'என்ன சார், நதிக்கரையினிலே என்று இல்லாமல் நதி.. கரையினிலே என்று விளம்பரங்களில் வருகிறதே.. இது அறிந்தே செய்ததா?' என்று. அதற்கு அந்த இயக்குனர் 'ஆமாம்.. கதைப்படி நதி கரையேறி வருவதைக் குறிக்கவே அவ்வாறு வைத்தோம்' என்று சொன்னார். இவர்கள் இவ்வாறு சொல்வதற்கு முன்பும் யாரும் இதைப்பற்றி கேட்கவில்லை.. சொன்ன பிறகும் யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. படத்திற்கும் அதன் டைட்டிலுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்றெல்லாம் தமிழன் என்றும் அடம் பிடித்ததில்லை. 

எதற்கு சொல்கிறேன் என்றால், சர்வ சாதாரணமாக வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் 'தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' சொல்கின்றன.. தேவையான இடத்தில் ஒற்று இல்லை.. தேவையில்லாத இடத்தில் ஒற்று பயன்படுத்தப்படுகிறது. இதை யாரும் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை.

proof reading  என்று ஒரு பிரிவு பத்திரிகைகளில் இருக்கிறதா?.. அப்படியிருந்தும் அதில் இருப்பவருக்கே இலக்கணம் தெரியாவிட்டால் என்ன செய்வது? பிழை என்று தெரிந்தால் தானே அதை திருத்துவதற்கு? இந்தப் பிரச்னையை சமாளிக்கத் தான் 'இனி ஒற்று தேவையில்லை' என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலும்..

நானே சில இடங்களில் மேலே வேண்டுமென்றே ஒற்றில்லாமல் எழுதி இருக்கிறேன்.. உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருந்ததா அல்லது அது கண்ணைத் தான் உறுத்தியதா? இல்லையே.

(இதழ்கள் ஊறுமடி.... இதழ் "கள்" ஊறுமடி.. என்று ஒரு பாடலில் (வசந்த காலங்கள்) ஜெயசந்திரன் டி. ராஜேந்தரின் பாடலை பிரித்து accentuate செய்து , அழுத்தம் கொடுத்து பாடுவார். அதில் ஒற்றே இல்லையென்றாலும்,  அது போல தேவையான இடத்தில் அடிக்கோடிட்டோ அல்லது மேற்கோள் குறியிட்டோ எழுத வேண்டியது தான்.)

இலக்கணப்படி தவறு என்றாலும் இப்படித்தான் தமிழ் இன்று எழுதப்படுகிறது. முதலில் 'வழக்கொழிந்து வரும் ஒற்று' என்று தான் தலைப்பிட்டிருந்தேன்... அப்புறம் இதில் என்ன தயக்கம் என்று 'வழக்கொழிந்து விட்ட ஒற்று' என்று மாற்றிவிட்டேன்.


எனது கோபமெல்லாம் இது தான். சந்திப் பிழை என்று ஒன்று இருக்கிறது என்றே தெரியாத கூட்டம் தான் இன்று தமிழ் அழிந்து வருகிறது என்று அங்கலாய்க்கிறது. தமிழ் அழிந்து போகக்கூடிய மொழி அல்ல. அதன் பக்தி இலக்கியம் ஒன்றே அதைக் காப்பாற்றும். அப்படியே அது அழிந்தாலும், அதற்கு, தமிழ் சரியாக கற்றுக்கொள்ளாத தமிழர்கள் தான் காரணமாக இருப்பார்களே அன்றி ஹிந்தி அரக்கியோ, ஆங்கிலப் பரங்கியோ அல்ல. அது சரி.. இவர்களுக்கு புரட்சி செய்யவே நேரம் போதவில்லையே.. இதில் மொழியை ஒழுங்காக கற்றுக் கொள்ளவெல்லாம் ஏது நேரம்?


 
Custom Search