விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்
(கோபப் புயலாய் இருந்த பெரியவா
அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)
ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக
வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள்
பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்.
சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.
ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.
ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர்.
'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்.
அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?
'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!
"ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!
முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்!
விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!
கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.
வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:
"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]
. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.
"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?
அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.
அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.
நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!
உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!
அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்!